சென்னை:
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தொழில்நுட்ப கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா என்பவர் முதலாண்டு படித்து வந்தார். இவர் கடந்த 9ந்தேதி, ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தூக்குப்போட்டுக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட் நிலையில், மாணவியின் செல்போனை ஆராய்ந்த அவரது பெற்றோர், அதிர்ச்சி அடைந்தனர். அதில் ,3 பேராசிரியர்களின் தொடர் தொல்லையால் மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து மாணவி பாத்திமாவின் பெற்றோர் கேரள முதல்வரை சந்தித்து, நியாயம் கோரிய நிலையில், கேரள அரசின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை காவல்துறை விசாரணை முடுக்கி விட்டுள்ளது.
இதற்கிடையில், பாத்திமா வழக்கு குறித்த விசாரணையை தீவிரப்படுத்துமாறு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சந்தேகிக்கப்படும், 11 பேராசிரியர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் இன்று நேரில் விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்ஆணையர், ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும், சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.