டெல்லி: வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக குழு அமைக்கவும் உத்தரவிட்டு உள்ளது.
மோடி தலைமையிலான மத்தியஅரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. மக்கள் விரோத வேளாண் சட்டங்ளை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மாநில எல்லையில், அரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றரை மாதங்களையும் கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கவும், விவசாய சட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரியும் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த சட்டங்கள் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அரசு விவசாயிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றதால், சமூக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மத்திய அரசிடம், சி.ஜே.ஐ: சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கிறீர்களா என்பது குறித்து எங்களிடம் கூறுங்கள். இல்லையெனில் நாங்கள் அதை செய்வோம். அதைக் கடைப்பிடிப்பதில் என்ன பிரச்சினை?
இந்த கடைசி சந்தர்ப்பத்தை நாங்கள் உங்களிடம் கேட்டோம். ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை. மேலும் விஷயம் மோசமடைகிறது. மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மக்கள் குளிரில் அவதிப்படுகிறார்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இந்த சட்டங்கள் தொடர்பாக ஒரு குழுவை அமைக்க நாங்கள் முன்மொழிகிறோம். சட்டங்களை அமல்படுத்துவதைத் தொடரவும் நாங்கள் முன்மொழிகிறோம். யாராவது வாதிட விரும்பினால், வாதிடுங்கள் என்று கூறியவர், வயதானவர்களும் பெண்களும் ஏன் போராட்டங்களில் வைக்கப்படுகிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை என்று கூறினார்.
மேலும், இந்த சட்டங்களை ஏன் நிறுத்திவைத்தீர்கள் என சில குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியதுடன், அதையெல்லாம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றம் அமைத்துள்ள குழு அதையெல்லாம் விவாதிக்கட்டும் என்று கூறினார்.