மதுரை,

நாடு முழுவதும் இளைஞர்களையும், குழந்தைகளும் தற்கொலைக்கு தூண்டும் உயிர்கொல்லி விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை வித்துள்ளது.

சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விளையாட்டு ‘புளுவேல் (Blue Whale)’. இந்த இணையதள விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாட தொடங்குபவர்கள் விரைவில், இந்த விளையாட்டுக்கு அடிமையாக தற்கொலை செய்துவிடுகின்றனர்.

தற்கொலையை தூண்டும் புளுவேல் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டிலும் இந்த விளையாட்டு காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது.

இந்த விளையாட்டை தடை செய்வது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

மேலும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதேபோல சிபிஎஸ்இ கல்வி வாரியமும் மாணவர்கள் கணினி பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புளுவேல் மரணம் குறித்து,  சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது. அந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, புளு விளையாட்டைப் பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும் இந்த வழக்கில், ஐஐடி இயக்குநர், சைபர் கிரைம் போலீசார் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த விளையாட்டை தடை செய்வது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.