சென்னை,
ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த சோதனை குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், உண்மையாக சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றால் முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தியிருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஜெ.வீட்டில சோதனை நடைபெறும்போது, முதலமைச்சரோ அல்லது எந்தவொரு அடைச்சர்களோ வராதது ஏன் என்றும், பதவியையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர் என்று கூறினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற சோதனை சந்தேகத்தின் பேரில் சோதனை என்றும், சோதனை நடைபெறுவதால் தவறு நடந்துள்ளது என கூறிவிட முடியாத, அதே நேரத்தில் போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்றும் கூறினார்.
மேலும் சோதனையின்போது போயஸ் இல்லத்தில் இருந்து பென் டிரைவ், லேப்டாப் மற்றும் சில கடிதங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர் என்ற டிடிவி தினரகன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக சதி உள்ளது என்றும் கூறினார்.
எங்களை அரசியலில் இருந்து எப்படியாவது வெளியேற்ற செய்ய வேண்டும் என்றும், இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.