ன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் உணவுதான் பலபேருக்கு சிக்கலாக இருக்கிறது. யாரை கேட்டாலும் சாப்பிடக்கூட நேரமில்லை என்பார்கள். அப்படி ஒருவேளை சாப்பாட்டை சாப்பிட்டாலும் காலை உணவை எப்படியாவது சாப்பிட்டே ஆகவேண்டும். டயட் இருக்கிறவர் களைப் பற்றி நமக்கு கவலையில்லை.

ஆனால் டயட்  இல்லாதவர்கள் தவிர்க்க இயலாத உணவு காலை உணவு. ஏன் தெரியுமா? நாம் இரவில் சாப்பிட்டு விட்டு படுத்தால் ஏறக்குறைய 6 முதல் 8 மணி நேரத்திற்கு எந்த உணவும் எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆகையால் காலையில் சாப்பிட்டே ஆகவேண்டும்.

இலங்கை, சிங்ப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் யாரையேனும் நீங்கள் பார்த்தால் பசியாறியாச்சா என்பார்கள். ஏனெனில் காலை உணவுக்குத்தான் இடை வெளி அதிகம்.

இப்படி காலை உணவைத் தவிர்ப்பவர்கள்தான் இதய நோய் பாதிப்பிற்குள்ளாக  87சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இதய நோய் பாதிப்பற்ற 40 வயதுக்கு மேற்பட்ட 6550 பேரிடம் கடந்த 18 வருடங்களாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்புத் தகவல்களை லோவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

முறையாக எடுக்கப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் காலை உணவுப் பழக்கம் குறித்த கேள்வி இடம்பிடித்திருந்தது.

பெரும்பான்மையாக 59 சதவிகிதத்தினர் தவறாமல் காலை உணவு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தனர்.  ஆனால்,5.1% பேர் காலை உணவு சாப்பிடுவதில்லை என்றும், 10.9%பேர் எப்போதாவது காலை உணவு சாப்பிடுவதாகவும், 25% பேர் சில நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இப்பழக்கம் குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், காலை உணவுப் பழக்கம் மற்றும் இதய நோய் இரண்டிற்கும் இடையில் உள்ள தெளிவான தொடர்பினை இக்குழு கண்டறிந்துள்ளது.

காலையில் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் அதிகபட்சமாக 87 சதவிகிதம் இதய நோய்க்கு உள்ளாகிறார்கள். ஒரு நாளின் மிக முக்கியமான உணவு காலை உணவேயாகும். ஆனால், கடந்த 50 வருடங்களில் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ,23.8%  இளைய தலைமுறையினர் தினமும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.  காலை உணவைத் தவிர்ப்பதால் எழும் ஆரோக்கிய குறைபாடுகள் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்தகால வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தோடு ஒப்பீடு செய்து வெளிவந்திருக்கும் முதல் ஆய்வு இதுவேயாகும்.

காலை உணவுப் பழக்கம் மற்றும் இதய நோய் பாதிப்பு இவற்றின் பின்னால் இருக்கும் தொடர்புக் காரணிகளை இக்குழு வரிசைப்படுத்துகிறது.

முதலாவதாக, காலை உணவைத் தவிர்ப்பவர்கள் ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனி பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். இரண்டாவதாக, சரியான காலை உணவுப் பழக்கம் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அமெரிக்க இதவியல் கல்லூரியால் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவொன்று, காலை உணவைத் தவிர்ப்பவர்கள் மற்றும் இரவு உணவைத் தாமதமாக உண்பவர்கள் மாரடைப்பு ஏற்பட்டால் பிழைப்பது கடினம் என்று தெரிவிக்கிறது.

காலை உணவைத் தவிர்ப்பது மெல்லிய உடலமைப்பைப் பெற உதவும் பழக்கமாக புகழ்பெற்ற பிரபலமான பலர் கடைப்பிடித்து வருகின்றனர். வயதான பிறகும் மெல்லிய உடலமைப்பைத் தக்க வைத்துக் கொள்ள காலை உணவைத் தவிர்க்கும் பழக்கமே உதவுவதாக தெரிவிக்கிறார் ஜோன்னா லூம்லே.

டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்ஸே, தான் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை எனவும், இரவு உணவு மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மேலும், சனிக்கிழமை களில் முழுமையாகவே உணவு எதுவும் உண்பதில்லை எனவும், இப்பழக்கம் தன் வாழ்நாளின் தொடர் தியானம் போன்ற பழக்கமாகி விட்டதென்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால் , அவரின் இந்த ப் பழக்கத்தை ஒருவித உணவுக் குறைபாடு என்றே பலர் தெரிவித்தனர்.
தற்போதைய ஆய்வு முடிவுகள், நம்முடைய உணவுப் பழக்கம் நமக்கு எப்படி உதவவோ அல்லது பாதிக்கவோ செய்கிறது என்று ஆராயும் ஒரு சீரிய விவாதத்தை நோக்கி நம்மைத் திருப்புகின்றன. எனினும் , காலை உணவுப் பழக்கம் குறித்த ஒரு தீர்க்கமான முடிவை இந்தப் புதிய ஆய்வு தரவில்லை.

“வெறும் விவாதங்கள் மட்டும் தூண்டுகோல்களாக அமைவதில்லை. காலை உணவைத் தவிர்க்கும் பழக்கமுடைய பெரும்பாலானோர் புகை மற்றும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். முறையான உடற்பயிற்சி செய்யும் ஆர்வமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இதுபோன்ற நேர்த்தியான புள்ளிவிவர ஆய்வுகள் வலியுறுத்தும் வித்தியாசங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழப்பமடைபவர்களும் இருக்கிறார்கள்” என்கிறார் இதயவியல் நிபுணரான போர்ஜோ இபனேஸ்.

-செல்வமுரளி