பெங்களுரூ:
கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் அவர்: கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட்வர்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவில் இணைய விரும்பும் தன்னார்வலர்கள் Citizen quarantine squad என்ற வெப்சைட்டில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இன்று தன்னுடைய வீட்டு அலுவலகத்தில் அமைச்சர்களையும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களையும் சந்தித்து பேச உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது, பெங்களூரில் உள்ள சில இடங்களும் சீல் வைக்கப்பட்டு விட்டன, இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா, மற்ற மாநிலங்களைவிட கர்நாடகா இந்த நிலையை வேறுமாதிரியாக கையாண்டு வருகிறது, கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டு போனாலும் நிலமை எங்கள் கையை மீறிப் போகவில்லை. இன்றும், நாளையும் அமைச்சர்கள் மற்றும் மருத்துவத் துறையின் நிபுணர்களுடன் இந்த நிலையை விவாதிக்க உள்ளோம்.
விதிமுறைகளை சிறிது தளர்த்தினாலும், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க மறுக்கின்றீர்கள், அது நமக்கே பாதிப்பாக முடியும். கடந்த இரண்டு வாரங்களாக விதிமுறைகளை தளர்த்தி வரும் வேளையில் இவ்வாறு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது சரியல்ல , சமூக இடைவெளியையும் தூய்மையையும் கடைபிடிக்கவில்லை என்றால் இதைவிட மோசமான லாக்டவுன் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும், பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் வரக்கூடாது என்றால் தயவு செய்து சமூக இடைவெளி மற்றும் இதர விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவும் என்று முதல்வர் எடியூரப்பா கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னுமொரு லாக்டவுன் செய்ய நேர்ந்தால் நமக்கு பாதிப்பு பெரிதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள், மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடுமையாக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.