மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து சீன நிறுவனமான ‘வீவோ’ விலகுவதன் மூலம், ஸ்டார் இந்தியா உள்ளிட்ட வேறுபல நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவில் நிலவும் சீன எதிர்ப்பு மனநிலை காரணமாக, ஐபிஎல் தொடரிலிருந்து சீன விளம்பரதாரர் நிறுவனமான வீவோ விலகலாம் என்ற செய்தி வெளியானது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமானதல்ல என்றபோதிலும், இதனால் வேறு பல நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
ஏனெனில், ஐபிஎல் தொடர்பாக, வீவோ நிறுவனம் அதிகளவில் தொலைக்காட்சி விளம்பரங்களை அளிக்கும். இதன்மூலம், ஸ்டார் இந்தியா நிறுவனம், அதிக வருவாய் ஈட்டுவது வழக்கம். தற்போது வீவோ நிறுவனம் விலகினால், ரூ.250 கோடிகள் வரையிலான விளம்பர வருவாய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஸ்டார் இந்தியா மட்டுல்லாமல், ஐபிஎல் தொடர்பான விளம்பர வருவாயை நம்பியுள்ள வேறுபல நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வீவோ தவிர, ஓப்போ, ரியல் மி, ஒன் பிளஸ், ரெட் மி, ஹூவே, லெனோவா, கூல்பேட், ஸோபோ மற்றும் டென்கோ உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் ஐபிஎல் தொடரில் ரூ.600-700 கோடிகள் செலவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.