ஈரோடு: உதயநிதி 29 பைசா மோடி என்று கூறினால், கஞ்சா உதயநிதி என்று சொல்லுவோம் என்றும், பிரதமர் மோடியின் கால் நகம் அழுக்குக்கு சமமானவர் உதயநிதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். மேலும், தமிழ்நாடு வளர்ந்திருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை வளர்ந்திருக்கிறது என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது, அரசியல் கட்சியினர் ஒருவர்மீது ஒருவர் தரம் தாழ்ந்தவிமர்சனங்களை செய்து வருகின்றனர். இது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. இருந்தாலும், சமீப காலமாக, திமுக தனது பிரசாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். அப்போது, பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று கூறுங்கள் என்று தெரிவித்தார். இது பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயகுமாரை ஆதரித்து சித்தோட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு வலிமையான பிரதமர் வந்து அமர்ந்தால்தான் வளமான தமிழகத்தை உருவாக்க முடியும். திமுகவிற்கு ஓட்டுப் போட்டு நாம் எந்த சாதனையும் செய்யப்போவதில்லை.
இந்த 2024 தேர்தல் ஒரு சரித்திர தேர்தல். ஏன் என்றால், யார் பிரதமராகப் போகிறார் என்பது தெரிந்து நாம் ஓட்டுப் போடப் போகிறோம். தமிழக முதல்வர் பொய் சொல்கிறார், எழுதிக் கொடுத்த சீட்டைத்தான் படிக்கிறார். திமுக காரர்கள் மக்களை பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த முறை மனிதரைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
10ஆண்டுகள் ஆட்சியிலிருந்து விட்டுத் தான் மீண்டும் வாய்ப்பு கேட்கிறோம். இதுவரை இந்தியா பார்க்காத அரசை நாம் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். நாட்டு வளர்ச்சிக்கும், தனி மனிதனின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது. பிரதமர் மோடியைப் பொருத்தவரை தமிழகத்திற்கு 16 லட்சம் கோடி கொடுத்திருக்கிறார். இந்தியாவில் வேற எந்த மாநிலத்திற்கும் வழங்காத அளவிற்குத் தமிழ்நாட்டில் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அது நேரடியாக வங்கிக் கணக்கின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் மூலமாகக் கொடுக்கப்படவில்லை. ஒரு விவசாயிக்கு 17 தவணைகளாக இதுவரை 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மகளிர் கேஸ் மானியம், மருத்துவ காப்பீடு என்ன எண்ணற்ற திட்டங்களைப் பிரதமர் வழங்கி வருகிறார்.
தொடந்து பேசிய அண்ணாமலை, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடியதுடன், அவரை தோல்வியடைந்த நடிகர் என்றும் கூறினார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் சம்பந்தம் இல்லை என்றும், அவரது குடும்பப் பின்னணி காரணமாகவே அவர் அரசியல்வாதியாக மாறியதாகவும் கூறினார்.
மேலும், உதயநிதி பிரதமர் மோடியின் கால் நகம் அழுக்குக்கு சமமானவர் என்றும், மோடியின் கால் மண்ணுக்கு கூட ஸ்டாலினுக்கு மதிப்பில்லை என்று கூறியவர், உதயநிதி 29 பைசா மோடி என்று கூறினால், கஞ்சா உதயநிதி என்று சொல்லுவோம்… ஆனால், எங்களுக்கு அவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சிப்பதில் உடன்பாடு இல்லை என்றவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் மூளை முடுக்கெல்லாம் கஞ்சா. தமிழ்நாடு வளர்ந்திருக்கிறதோ இல்லையோ கஞ்சா விற்பனை வளர்ந்திருக்கிறது” என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.
மேலும், கவுந்தப்பாடி பவானியில் ஏன் அரசுக் கல்லூரி இல்லை என்றால். இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனியார் கல்லூரி நடத்துகிறார். இதனால், இங்கு அரசுக் கல்லூரியை கொண்டு வர விடவில்லை என்று குற்றம் சாட்டினார். தற்போது, களம் நமக்கு சாதமாக உள்ளது. எனவே, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை ஆதரவு திரட்டினார்.