டில்லி

ரெயிலில் வழங்கப்படும் உணவுவகைகள் மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை என சிஏஜி அறிக்கை தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய ரெயில்வே, பயணிகளை தாங்களே உணவு எடுத்து வரலாம் என ரயில்வே நிர்வாகம் அலட்சியத்துடன் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான சி ஏ ஜி அறிக்கை ரெயில்வேயில் நிகழும் பல ஒழுங்கீனங்களை சுட்டிக் காட்டியது.  ஆனால் அவற்றை திருத்திக் கொள்ளாமல் ரெயில்வே தன் போக்கில் சில நடவடிக்கையும், பயணிகளுக்கு அர்த்தமற்ற யோசனைகளையும் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே போர்வைகள் தோய்க்கப்படவில்லை என புகார் தெரிவித்தமைக்கு, இனி போர்வைகளே வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததை பார்த்தோம்.

அதே போல ரெயிலில் வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிட லாயக்கற்றது என சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.  அந்த உணவு சமைக்கும் இடத்தின் அசுத்தங்களையும் பட்டியிலிட்டு காட்டி உள்ளது.  பயணிகள் இடையேயும் ரெயில் உணவைப் பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது.  சமீபத்தில் ஹவுரா – டில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி ஒன்று செத்துக் கிடந்தது நினைவிருக்கலாம்.

இதனால் ரெயிலில் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள சமையல் கூடங்கள் உடனடியாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி ரெயில்வே நிர்வாகம், சமையல் கூடங்கள் திருத்தி அமைக்க குறைந்தது ஒரு வருடத்துக்கு மேல் ஆகக் கூடும்.  அது வரை உணவுத் தரம் குறைந்து கிடைக்கலாம்.   எனவே அதுவரை பயணிகள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே எடுத்து வரலாம். என அறிவித்துள்ளது.

பயணிகள் அனைவராலும் உணவு எடுத்து வர முடியுமா?  என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி