திருவண்ணாமலை: மண்சரிவு ஏற்பட்ட திருவண்ணாமலையில் ஆய்வு செய் ஐஐடி வல்லுநர் குழு, அதிக மழை பெய்தால் மகா தீப மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சாதாரண மழையால் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.
ஃபென்கல் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கனமழை காரணமாக, திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே மலையிலிருந்த பாறை உருண்டதில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ஒரு வீட்டில், ராஜ்குமார், 32, அவர் மனைவி மீனா, 26, மகன் கவுதம், 9, மகள் இனியா, 7, உறவினர்களின் குழந்தைகளான மகா, 12, ரம்யா, 12, வினோதினி, 14, ஆகிய ஏழு பேர் மண்ணுக்கடியில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் இணைந்து தேடி நிலையில், அவர்கள் 7 பேரும் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. ஐந்து உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில், உடல் பாகங்கள் பிய்ந்தவாறு கண்டெடுக்கப்பட்டன. மேலும் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. மண் சரிவால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தீப மலையில் மொத்தம் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மலைப்பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மண் சரிவு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஐஐடி வல்லுநர் குழுவை வரவழைத்தது. அந்த குழுவினர் நேற்று மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஐஐடி மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள மண் மற்றும் கல் ஆய்வு எடுத்தனர். அங்கு எடுக்கப்பட்ட மண்ணின் தரம், மண் சரிவுக்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஐ.டி. வல்லுனர்கள், தீப மலையில், தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்ததுடன், லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினர். மேலும், மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் அந்த பகுதியில் உள்ள மண், கல் குறித்து ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என கூறியதுடன், மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம். இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர்.