லக்னோ:

நாட்டில் பொருளாதார மந்தநிலை இருந்தால், மக்கள் வேஷ்டி குர்தாதான் அணிந்திருக்க முடியும், பேன்ட் சர்ட், கோர்ட் அணிய முடியுமா என்று உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. வீரேந்திரா சிங் கேள்வி எழுப்பி உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

நாடு வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக, வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை முறியடிக்க  முடியாமல் மோடி அரசு தள்ளாடி வருகிறது.

இந்த நிலையில், உ.பி. மாநிலம் பாலிய தொகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அந்த தொகுதியின் எம்.பி. வீரேந்திரா சிங், நாட்டில் பொருளாதார மந்த நிலை இருந்தால், மக்கள் அனைவரும் வேஷ்டியும், குர்தாவும்தான் அணிந்திருக்க முடியும், ஆனால், மக்கள் பேன்ட், சர்ட், கோர்ட் அணிந்துள்ளனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தலைநகர் டெல்லி உள்பட பல பகுதிகளில் பொருளாதார மந்தநிலை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், எதிர்க்கட்சியில் இதுகுறித்து தவறான தகவல்களை தெரிவித்து வருவதாக விமர்சித்தவர், “மந்தநிலை எங்கே? என்று கூட்டத்தில் கூடியிருந்த மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாட்டில் மந்தநிலை இருந்திருந்தால், நாம் அனைவரும் குர்தா மற்றும் தோதி அணிந்து வந்திருப்போம், உங்களிடம் சால்வை, கோட் அல்லது ஜாக்கெட் அணிய பணம்  இருக்காது” என்று அவர் பார்வையாளர்களை சுட்டிக்காட்டியவர், மக்களுக்கு  வாங்கும் திறன் இருப்பதையே இது  காட்டுகிறது என்று கூறினார்.

“நாங்கள் கடையில் பேன்ட், பைஜாமா, சால்வை மற்றும் பிற ஆடைகளை வாங்கவில்லை என்றால், அது எங்கிருந்து வரும்” என்றும் கேள்வி எழுப்பினார்.

பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு… சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.