நேற்றிலிருந்து தமிழகத்தை “ரெய்டு” ஜூரம் ஆட்டிப்படைக்கிறது. சசி – தினகரன் குடும்பத்தை சுற்றி வளைத்து நடக்கும் இந்த ரெய்டுகள் குறித்துதான் சமூகவலைதளங்கள், ஊடகங்கள் என்றில்லை சாலையில் இரு நண்பர்கள் சந்தித்துக்கொண்டாலும் பேசுகிறார்கள்.
இதற்கிடையே அவர் வீட்டில் ரெய்டு.. இவர் வீட்டில் ரெய்டு என்று வாட்ஸ் அப் வதந்திகள் றெக்கைகட்டி பறக்கின்றன. இந்த நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான சி.ஆர். சரஸ்வதி (சென்னை அசோக்நகர்) வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று உலவ.. பரபரப்பு மேலும் அதிகமானது.
நாம் சி.ஆர். சரஸ்வதியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “அப்படியா.. எனக்கே தெரியாமல் என் வீட்டில் ரெய்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இப்படித்தான் என் உடல் நிலை குறித்தும் முன்பு தகவல் பரப்பினார்கள்” என்றார்.
சசிகலா – தினகரன் குடும்பத்தினரை குறி வைத்து நடக்கும் வருமானவரித்துறை சோதனைகள் குறித்து கேட்டோம். அதற்கு சி.ஆர். சரஸ்வதி, “ஒரே நேரத்தில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்துகிறார்கள் என்றால் அதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?
ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் உருவானவை… இயங்கியவை. அவற்றில் வரி ஏய்ப்பு செய்திருந்தால் இத்தனை ஆண்டுகள் நடத்தியிருக்க முடியுமா? ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல் ரெய்டுக்கு வந்திருப்பார்களா?
மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இருக்கிறது. இதை எதிர்த்தரப்பினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல… நமது எம்ஜிஆரையும், ஜெயா டிவியையும் மீட்பது என்றெல்லாம் எடப்பாடி தரப்பினர் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.. அதை மய்யப்படுத்தித்தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது
மேலும் எடப்பாடி அணியினர் என்ன சொன்னாலும் மத்திய அரசு கேட்கிறது. அந்தளவுக்கு மத்திய அரசின் பாசத்துக்குரியவர்களாக எடப்பாடி அணியினர் உள்ளனர்.
ஆனால் பதிலுக்கு தமிழகத்தின் நலன்களை எடப்பாடி – ஈ.பி.எஸ். அணியினர் அடகு வைத்துவிட்டனர். நீட், ஜி.எஸ்.டி. எல்லாவற்றையும் ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் அதற்கெல்லாம் இவர்கள் தலையாட்டி பொம்மைபோல் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
ஜெயலலிதா எங்களுக்கு தைரியத்தையும், மன உறுதியையும் அளித்திருக்கிறார். நாங்கள் இந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. சட்டபடி எதிர்கொள்வோம்” என்றார் சரஸ்வதி.
மேலும், “சேகர் ரெட்டி வீ்ட்டுல ரெய்டு நடந்தபோது டைரி கிடைத்தது. அதில் அமைச்சர்கள் பலரது பெயர்கள் இருந்தன. அங்கெல்லாம் ரெய்டு நடத்தப்பட்டதா? அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடந்தபோதும் டைரி கிடைத்தது. அதில் இருந்தவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்ததா?
எல்லாவற்றுக்கும் மத்திய பாஜக அரசுதான் காரணம். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்துவிட்டு காத்திருந்தோம். ஆனால் ஈபிஎஸ் – ஒபிஎஸ் இணைப்புக்கு ஒரே நாளில் சந்திக்க வாய்ப்பு கொடுத்து செய்து வைத்தார் அப்போதைய கவர்னர். ஆகவே மீண்டும் சொல்கிறேன். இப்போதைய ரெய்டுக்கும் மத்திய பாஜக அரசே காரணம்” என்றார் சரஸ்வதி.
பிறகு அவரே தொடர்ந்து, “என் வீட்டில் வருமானவரி ரெய்டு என்பது வதந்தி. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே பியாண்ட் த லிமிட் தாண்டியதே இல்லை. அதனால யார் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வந்து சோதனை நடத்தலாம். என் வீட்டில் நிறைய நாய்கள் வளர்க்கிறேன். வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தால் அந்த நாய்களுக்கு பிஸ்கட்டுகள் வாங்கி வரட்டும்” என்று சிரித்தார் சி.ஆர். சரஸ்வதி.