மாநில அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்களுக்கான மத்திய அரசின்  ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னை அம்பத்தூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வரியை உயர்த்துவதில் தான் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறதே ஒழிய வருமானத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சாதியையும், அறிவையும் தொடர்புபடுத்தி பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேட்டபோது, சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும் என நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், பணம், புகழ், பெயர் என அனைத்தையும் தாம் பார்த்துள்ளதாகவும் பெரிய பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் பழகியுள்ளதாகவும் கூறிய ரஜினிகாந்த், ஆனால் இதுவரை சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என கூறினார்.நிம்மதி மட்டுமே நிரந்தரம் சந்தோஷம் வந்து வந்து செல்ல கூடியது என தெரிவித்திருந்தார்.