சென்னை: தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமின்றி ஆட்சியர்கள் மீதும் பணிவிதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் காவல் துறை மற்றும் சிறைத் துறையில் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான போலீசார், காவல்துறை அதிகாரிகளின் வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை நீதியரசர்கள், எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மார்ச் 10ந்தேதி அன்று எ மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுசார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் ஆர்டர்லி முறையை ஒழித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அரசாணையின் அடிப்படையில் ஆர்டர்லி முறை மாநிலம் முழுவதும் முழுமையாக ஒழிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஆர்டர்லி முறை தொடர்பாக வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் கூட்டணி அமைத்து செயல்பட்டால் கடுமையாக கருதப்படும்” என்றனர்.
மேலும், “ஆர்டர்லி நடைமுறையை ஒழிக்கும் கொள்கையை அமல்படுத்தவில்லை என்றால், ஆட்சியர்கள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்” என எச்சரித்து விசாரணையை மார்ச் 23-க்கு தள்ளிவைத்துள்ளனர்.
[youtube-feed feed=1]