மதுரை,
தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக ஆளுநர் பன்வாரிலால் தன்னிச்சையாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் கோவை சென்ற ஆளுநர் அங்கு அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் நெல்லை, குமரி மாவட்டத்துக்கு சென்றும் ஆய்வு பணிகள் மேற் கொண்டார்.
இது மாநில அரசு அதிகாரத்தில் அத்துமீறி தலையிடுவதாக திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கடலூர் பகுதியில் ஆளுநர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,
பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் ஆளுநர் ஆட்சியே நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்பை மதிக்காமல் நடப்பதாகவும் கூறிய திருநாவுக்கரசர், தமிழக ஆளுநர் அவரது பணியை மட்டும் கவனிக்க வேண்டும் என கூறினார்.
மேலும், கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி பெரிய பாண்டியனின் மரணம் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆர்.கே.நகரில் தி.மு.க வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் தனது பணியை சரிவரச் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.