சென்னை:
ன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால், அது  சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, சினிமாத்துறையும் முடங்கி உள்ளது. தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்து கடைகளை திறந்துள்ள நிலையில், இன்னும் சினிமா தியேட்டர், மால்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கவில்லை.
இதன் காரணமாக தயாரித்து முடிக்கப்பட்ட பல படங்கள் , தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலை உள்ளது. இதனால், பல நிறுவனங்கள் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில்,  சமீபத்தில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியானது. அதுபோல, சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று என்ற படமும் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,  ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால், அது  சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது என்று எச்சரித்தவர்,  திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை என்று கூறினார்.
ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது  என்று கூறியவர், ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள், தமிழக அரசுக்கும்  வருவாய் இழப்பும் ஏற்படும் என கூறினார்.