சென்னை,
சென்னையில் பெய்த கனமழை காரணமாக 112 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இடங்களில் விரைவில் மின்சாரம் விநியோகம் சீர் செய்யப்படும் என்றும், மின்சாரம் தொடர்பாக எந்தவிதமான புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கு தானே பொறுப்பேற்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வாக்குறுதி அளித்துள்ளார்.
தற்போது மழை இல்லாததால், தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு வருக்றது. இந்நிலையில், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சென்னையில் மொத்தமுள்ள 1541 மின் வழித்தடங்களில், பாதுகாப்பு கருதி 128 வழித்தடங்களில் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்படும். தேவைப்பட்டால் வெளிமாவட்டங்களிலிருந்தும் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சென்னையில் மின்சாரம் சீராக்கப்படும்.
மின் இணைப்பு பெட்டிகள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான புகார்கள் வந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு தானே பொறுப்பேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.