சென்னை: வழக்கை வாபஸ் பெற்றால், ஸ்டூடியோவில் உள்ள அவரது பொருட்களை எடுத்துச்செல்ல இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை விதித்துள்ளது.

பிரசாத்ஸ்டூடியோவில் உள்ள அறை ஒன்றில், கடந்த 40 வருடங்களாக இளையராஜா இசை அமைத்துவந்தார்.  இளைஞயராஜாவுக்கு, பிரசாத் ஸ்டூடியோவில் உரிமையாளரான எல்.வி.பிரசாத் அந்தஅறையை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.  ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு, இளையராஜாவை ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்  கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. பிரசாத் ஸ்டூடியோ  சார்பில் தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர  வேண்டும் என இளையராஜா வழக்கு போட்டார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  பிரசாத் ஸ்டுடியோவில் 1976 முதல் இசை அமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அங்கு ஒருநாள் தியானம் செய்துவிட்டு, எனது  பொருட்களை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று  மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘பிரசாத் ஸ்டூடியோவில் சில மணிநேரம் தியானம் செய்ய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஏன் அனுமதி வழங்க கூடாது? என கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து விளக்கமளிக்க பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் வாதாடிய பிரசாத் ஸ்டூடியோ வழக்கறிஞர், சில நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழைய இசையமைப்பாளர் இளையராஜவை அனுமதிக்க தயார் என்று கூறியதுடன், தங்கள் மீது, அவர்  சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோரக் கூடாது. ஒரு உதவியாளர் , ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் தனது கைப்பட இளையராஜா நீதிமன்றத்தில் உத்தரவாதம் மனு தாக்கல் செய்தால் அனுமதிப்போம் என்று கூறியுள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர்,  நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்கப்படும் என  தரப்பு பதில் அளித்துள்ளது.