மதுரை:  பலகோடி ரூபாய் முறைகேடு செய்யவே  தமிழ்நாட்டில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் தரமற்ற சாலைகளுக்கு அதிகாரிகளே பொறுப்பு என்றும் கூறியுள்ளது.

சாலைகள் அமைக்கும் விவகாரத்தில், தரமற்ற சாலைகள் அமைத்தால், அதற்கான நிதி இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காண்டிராக்டர்களிடம் இருந்துதான் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். 

புதிதாக அமைக்கப்படும்  சாலைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசம் அடைந்து விடுகின்றன இதையடுத்து, . புதிது புதிதாக டெண்டர் நடத்தி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் மூலம் காண்டிராக்டர்களும், அரசு அதிகாரிகளும் முறைகேடு செய்கின்றனர் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சி.எம்.ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தங்களது ஊரில் அமைக்கப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,    திருநெல்வேலி  மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி முதல் உகந்தான்பட்டி இடையே சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலை கடந்த 2018-ம் ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்கப்பட்ட 2 மாதத்தில் முழுமையாக சேதமடைந்தது. தரமற்ற சாலை அமைத்த கான்டிராக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் முறையாக அங்கு சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில்  அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சாலைகள் அமைக்கப்பட்டவுடன் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசம் அடைந்து விடுகின்றன. புதிது புதிதாக டெண்டர் நடத்தி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் மூலம் காண்டிராக்டர்களும், அரசு அதிகாரிகளும் முறைகேடு செய்ய முடியும் என்பதுதான் தரமற்ற சாலைகள் அமைப்பதற்கு காரணம் என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

ஒருமுறை சாலையை அமைத்தால் எத்தனை ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சாலைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், எந்த சாலையாவது இந்த விதிமுறைகளின் படி குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தரமான முறையில் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை டெண்டர் பெறும் காண்டிராக்டர்கள் உறுதிப்படுத்த இயலுமா? என கேள்வி எழுப்பினர்.

இது போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு வெறும் நிதி இழப்பு ஏற்படுகிறது என்று  கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,

“நெடுஞ்சாலைத்துறை விதிகளின் படி சாலைகள் அமைக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு மற்றும் கள ஆய்வில் கவனக்குறைவு ஏற்பட்டால் அதிகாரிகளும், காண்டிராக்டர்களும்தான் பொறுப்பேற்க வேண்டும்.  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,  கைது சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காண்டிராக்டர்கள் இணைந்து நிதி இழப்பை ஏற்படுத்தினால் அந்த தொகையை அவர்களிடம் தான் வசூலிக்க வேண்டும்.

இது குறித்த வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆகியோர் வழங்க வேண்டும்”

இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.