டெல்லி: சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பீட்டு செயல்பாட்டில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், கொரோனா ஊரடங்குக்கு பிறகு,  அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு  கிடைக்கும்” என்று சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்து உள்ளார்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, சிபிஎஸ்இ (CBSE) 12வது பொதுதேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. நீதிமன்றமும் அதற்கான அறிவிப்புகளை 2 வாரத்திற்குள் அறிவிக்க மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள்  குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாககவும், வல்லுநர்கள் இது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மதிப்பீடு தொடர்பான இறுதி முடிவெடுக்க 2 வாரங்கள்  ஆகும் எனவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)  தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, பிளஸ்2 மாணவர்களின் மதிப்பெண்கள்  மதிப்பீட்டு முறையில் திருப்தி அடையவில்லை என்றால், கோவிட் -19 க்குப் பிறகு அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார். “தேர்வு முடிவுகள் விஷயத்தில் மாணவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். உயர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு அவர்களின் தேர்வு முடிவுகள் கிடைக்கும் என்று மாணவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று சிபிஎஸ்இ அதிகாரி கூறினார்.