சென்னை:
என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு (சசிகலா குடும்பத்தினருக்குத்தான்) பேரிழப்பு என்று பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடும் தொனியில் பதில் தெரிவித்து உள்ளார். தற்போதைய சூழலில் வேறு கட்சிக்கு கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை என்றும், டிடிவி தினகரன் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், டிடிவி மீது அதிருப்தியில் உள்ள அவரது தீவிர விசுவாசிகளில் ஒருவரான பெங்களூர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க.வில் கர்நாடக மாநில பொறுப்பாளராக இருந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளராக உள்ளார். சசிகலா குடும்பத்தினருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.
டிடிவி தினகரனின் அடாவடி நடவடிக்கை காரணமாக, அவர்மீது அதிருப்தி கொண்டவர்கள் சமீப காலமாக கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை நோக்கி ஓடிய நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர்களான செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் திமுகவுக்கு தாவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போதைய நிலையில், டிடிவிக்கு பெரும் ஆதரவாக இருப்பவர்கள் பெங்களூர் புகழேந்தி, சென்னை வெற்றி வேல் மட்டுமே. இந்த நிலையில், புகழேந்தியும் டிடிவி மீதான அதிருப்தி காரணமாக, கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
சமீபத்தில் புகழேந்தி பேசியதாக ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், ‘டிடிவி தினகரன் முகவரி இல்லாமல் 14 வருடங்கள் வெளியே இருந்ததாகவும், அவரை ஊருக்குக் காண்பித்தது இநத புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட டிடிவி தினகரன் கிடையாது. நாம்தான் அவரை வெளியே காண்பித்தோம்” என்று கட்சி நிர்வாகி ஒருவரிடம் விரக்தியாக பேசியிருந்தார். இந்த வீடியோ அமமுக சமுக வலைதள நிர்வாகமே வெளியிட்டுள்ளது.
இது அமமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், என்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐடி பிரிவு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தற்போதைய நிலையில், வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியவர், டிடிவி தினகரன் என்னை கட்சியை விட்டுப் போ என்றால் சசிகலா என்னை கட்சிக்கு வா என்பார். சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும். விடை கிடைக்கும் என்றார்.
மேலும், டிடிவி தினகரனின் நிர்வாகத்திலும், நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை என்று கூறியவர், தான் வீடியோவில் பேசியது உண்மை என்று ஒத்துக்கொண்டவர், அது எடிட் செய்யப்பட்டு உள்ள தாகவும் குற்றம் சாட்டினார். என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவர்கள் விரலைக் கொண்டு அவர்களது கண்ணை குத்தி உள்ளனர் என்று தெரிவித்தவர், என்னை கட்சியை விட்டு நீக்கினால், அது அவர்களுக்குத்தான் (சசிகலா குடும்பத்தினருக்கு) பேரிழப்பு என்று தெரிவித்தார்.
புகழேந்தி மீது பல வழக்குகள் உள்ள நிலையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி, சிறைக்கு வெளியே அவ்வப்போது சென்று வரவும், சிறைக்குள் வசதியாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்யும் வகையில், பெங்களூரு சிறைத்துறை டிஜிபிக்கு ரூ.2கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் புகழேந்தி, சசிகலாவுக்கு எதிராக அப்ரூவர் ஆனால், சிசகலா சிறையில் இருந்து வெளியேறுவதில் மேலும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.