ராகுல் மறுத்தால் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிரியங்கா ஏற்க வேண்டும்’’ அனில் சாஸ்திரி வலியுறுத்தல்..
அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், வரும் ஜுன் மாத இறுதிக்குள் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் நிலையில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அனில் சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே காங்கிரஸ் கட்சியைத் திறம்பட வழி நடத்த முடியும் ‘’ என்று தெரிவித்துள்ளார்.
‘’தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுத்தால் பிரியங்கா காந்தியை புதிய காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும்’’ என வலியுறுத்திய அனில் சாஸ்திரி’’பிரியங்கா காந்தி வசீகரம் மிக்க தலைவர், இந்திரா வடிவத்தில் பிரியங்காவை காங்கிரசார் பார்க்கிறார்கள்’’ என தெரிவித்தார்.
‘’காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் மற்றும் பிரியங்கா போன்று பிரபலமான தலைவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியில் கிடையாது என்பதால், அவர்களில் இருவரில் ஒருவரைக் கட்சி பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என அனில் சாஸ்திரி,மீண்டும் கேட்டுக்கொண்டார்.
-பா.பாரதி.