மும்பை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் சாம்னா கருத்து தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கோரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.   அது மட்டுமின்றி திரையரங்குகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு வருகின்றன.   இதனால் பலர் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது.  குறிப்பாகத் தினசரி ஊதிய ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் சாம்னாவில், “தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க திரையரங்குகள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்டவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.  விரைவில் மற்ற கடைகளும் மூடப்படலாம்.

நீண்ட நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் மக்கள் எப்படிப் பணம் சம்பாதிப்பார்கள்?   அவர்கள் எதைச் சாப்பிடுவார்கள்?   வைரஸிடம் இருந்து மக்களை இதுபோன்ற நடவடிக்கையால் பாதுகாக்க முடியும். ஆயினும், பசி காரணமாக உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மகாராஷ்டிராவில் புனே நகரில் கொரோனாவால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   புனேவும் சீனாவின் வுகான் நகரைப் போல முற்றிலும் முடங்குமா?  தற்போது இது குறித்து முடிவு எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இந்த வைரஸ் பாதிப்பு இப்போது 2-ஆம் நிலையில் உள்ளது.

இந்த நிலையிலேயே மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அதுவும் அடுத்த 30 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.