சென்னை:
உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்துகட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கவுதமன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் தமிழகத்தில் இளைஞர்களின் புரட்சி வெடிக்கும் என்று எச்சரித்தார்.
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழர் உரிமைக்கான மாணவர்கள் – இளைஞர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் சார்பாக இயக்குனர் கவுதமன் பேசியதாவது,
உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக மத்திய அரசுக்கு இன்னும் 25 நாட்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விடுங்கள். இல்லையேல் வருகிற 30 ந்தேதி தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் கடலூரில் திரண்டு பேரணியாக வந்து கோட்டையை முற்றுகையிட்டு புரட்சி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிட்ட ,”நீட்” தேர்வுக்கு எதிராக மாபெரும் மாநாடு வருகிற 19-ந்தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடத்த இருப்பதாகவும், அந்த மாநாட்டு “நீட்”டுக்கு முடிவு கட்டும் வகையில் இருக்கும் என்று கூறினார்.
தமிழரின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தருவதாகவும், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையில் ஐ.பி எல்.போட்டி சென்னையில் வேண்டாம் என்றும் கூறினார்.