புதுடெல்லி:
கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற 5 தொகுதிகளில், 4 தொகுதிகள் தமிழகத்திலிருந்து கிடைத்துள்ளன.
2014-ம் மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 10 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வென்றன. கேரளாவில் இடது சாரிகள் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் கூட கடந்த முறை வெற்றி பெற்றனர்.
ஆனால் இம்முறை கேரளாவில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்துள்ளது.
கேரளாவில் ஒரு தொகுதியிலும், தமிழகத்தில் 4 தொகுதிகளில் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர்.
சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் மக்களவையில் எதிர்கட்சியாக இருந்த இடதுசாரிகள், படிப்படியாக குறைந்து 5 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளன.
அக்கட்சிக்கு வலுவான மாநிலமாக கருதப்படும் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஒரு தொகுதியில் கூட இடதுசாரிகள் வெற்றி பெறவில்லை.
பீகாரில் எதிர்பார்க்கப்பட்ட கன்னையா குமார் பெகுசாராய் தொகுதியில் தோல்வியடைந்தது இடதுசாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இடது சாரிகள் 63 மக்களவை தொகுதிகளைப் பெற்றனர்.
அதன் பின்னர் படிப்படியாக வெற்றி குறைந்துவிட்டது.
இடதுசாரிகள் இதுவரை இல்லாத அளவுக்கு படுதோல்வி அடைந்துள்ளனர். மக்களிடம் எப்படி மீண்டும் நெருங்குவது என்பது பற்றி இடது சாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என கருத்துகள் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு பதில் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மக்கள் நம்பிக்கையை இடதுசாரிகள் இழந்துவிட்டதாக கூறுவது தவறு. தேர்தல் முறையில் பணம் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்று நினைக்கிறோம் என்றார்.
கடந்த 5 ஆண்டுகளாகவே பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்தது. இது எதுவுமே அவர்களுக்கு பலன் அளிக்கவில்லை.
எனினும், எதிர்காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக இன்னும் வலுவாக போராடுவோம் என்கின்றனர் இடதுசாரிகள்.