திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலாம்பாடி கிராமத்தில் உள்ளது பழனியாண்டவர் கோவில். கடந்த செய்வாய்க்கிழமை இங்கு நடைபெற்ற விழாவில் தொகுதி எம்.எல்.ஏ.வான உ.தனியரசுவும் கலந்துகொண்டார்.
அப்போது சாலை வசதி கோரி சிலர் கோரிக்கை வைக்க.. அதற்கு தனியரசு ஏதோ பதில் சொல்ல.. வாக்குவாதம் ஆகிவிட்டது. அப்போது தனியரசுவும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து சிலரை தாக்கியதாக கூறி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னிமலை–காங்கேயம் போக்குவரத்து பாதிக்கப்படவே, காவல்துறையினர் வந்து மக்களிடம் பேசினர். மக்களின் கோரிக்கையை ஏற்று, தனியரசு மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி கொடுக்க சாலை மறியல் கைவிடப்பட்டது.
நாம் தனியரசு எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்டோம்.
அவர், ”அன்று மக்கள் என்னை அன்புடன் கோயிலுக்கு அழைத்திருந்தனர். மாலை மரியாதை செலுத்தி பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அப்போது இருவர் வேண்டுமென்றே ஏதேதோ பேசினர். இதை ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்தார். சாதாரணமாக பேசுவதையும் வீடியோ எடுத்து பொய்யாக வதந்தி பரப்புவது இப்போது நாகரீகமாக ஆகிவிட்டது. ஆகவே அந்த இளைஞரை நானும், தம்பிகளும் (அமைப்பினர்) தடுத்தோம். அவ்வளவுதான்” என்றார்.
மேலும தனியரசு, “காங்கேயம் எம்.எல்.வாக இருந்தவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த என். எஸ். நடராஜன். அவருக்கு கடந்த சட்டமன்றத்தேர்தலில் அக்கட்சியில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஜெயலலிதா எனக்குத்தான் வாய்ப்பு அளித்தார். நானும் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றேன். அதிலிருந்தே நடராஜனுக்கு என் மீது அதிருப்தி. தவிர இப்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார். ஆகவே அ.தி.முக.வை ஆதரிக்கும் என் மீது அவருக்கு மேலும் ஆத்திரமாகிவிட்டது. அவர்தான் தனது ஆதரவாளர்கள் சிலரைத் தூண்டிவிட்டு என் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
தனியரசு குற்றம்சாட்டுக்களுக்கு விளக்கம் கேட்க, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.என். நடராஜனை தொடர்புகொண்டோம்.
அவர், “முதலில் ஒரு விசயம். அ.தி.மு.க.வில் இருந்து விலகி, ஓ.பி.எஸ் அணியில் இருப்பதாக தனியரசு சொல்வதே தவறு. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க! நாங்கள்தான் உண்மையான அம்மா விசுவாசிகள். அந்த விசுவாசத்தினால்தான், அம்மாவின் உத்தரவை ஏற்று, கடந்த
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனியரசு வெற்றி பெற காங்கேயம் தொகுதி முழுதும் சுற்றி வந்தேன். அப்போது இரு மாதங்கள் அவர் என்னுடன்தான் இருந்தார். அவருக்கே தெரியும்.. யாரையும் பின்னால் இருந்து இயக்குபவன் நானா என்று” என நிறுத்திய நடராஜன், “மக்களி்ன் எதிர்ப்பை தனியரசு எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே காங்கேயத்தில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட தனியரசு, என்னையும், முன்னாள் அமைச்சர் ராமசாமியையும் வரம்பு மீறி பேசினார். இதை அப்போதே மக்கள் எதிர்த்தனர். தொகுதிவாசிகளிடம் கேட்டுப்பாருங்கள்.. யார் மீது தவறு என்பதை வெளிப்படையாக சொல்வார்கள்” என்றார்.
காங்கேயம் ஆலாம்பாடி பகுதி மக்களிடம் பேசினோம். அவர்கள், “மூன்று நாட்களாகியும் தனியரசு மீது எந்தவித நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை. ஆகவே மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று ஆவேசத்துடன் கூறுகிறார்கள்.