மதுரை
மீண்டும் மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா வந்தால் அவரை காவல்துறை கைது செய்யும் என புதிய ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் மறைவை ஒட்டி 293 ஆம் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆதின உரிமைக்காக நித்தியானந்தாவும் போட்டியிடுவது தெரிந்ததே. ஏற்கனவே மறைந்த ஆதீனத்தால் நித்தியானந்தா விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். நேற்று 293ஆம் ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “மதுரை ஆதீனத்தில் விரைவில் வித்வான், ஓதுவார் நியமித்தல், மூன்று வேளையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மக்கள் மத்தியில் தேசப்பற்று குறைந்து வருவதால் தேவார பாடசாலை மூலம் தேசப்பற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிமேல் நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்கு வந்தால், அவரை காவல்துறையினர் கைது செய்வார்கள். அவரை தேவையின்றி யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். இந்து சமயத்தை ஏற்று வணங்கி யார் சமய நல்லிணக்க மாநாடு நடத்தினாலும், அதில் நான் கலந்து கொள்ளத் தயாராக உள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.