சென்னை
திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.
தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை பலரும் கைப்பற்றுவதாக உள்ள கதையான ’அசுரன்’ திரைப்படத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் பார்த்தார். அப்போது அவர் தனுஷ் நடிப்பை புகழ்ந்ததுடன் இந்த பஞ்சமி நிலக் கைப்பற்றுதலை கடுமையாக சாடினார். அதையொட்டி பாமக தலைவர் ராமதாஸ் திமுகவின் அதிகார பூர்வமான முரசொலி நாளிதழின் அலுவலகக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்டாலின் முரசொலி நிலத்துக்கான பட்டாவின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டார். அந்த பட்டாவுக்கு முந்தைய ஆவணங்களை அதாவது தாய்ப்பத்திரத்தை அளிக்க வேண்டும் என ராமதாஸ் கூறினார். அத்துடன் அதில் பஞ்சமி நிலம் குறித்த குறிப்புக்கள் இருக்கும் என தெரிவித்தார்.
அதற்கு ராமதாஸ் தாம் கூறியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக்த தயார் என ஸ்டாலின் அறிவித்தார்.
பாஜக மாநில செயலர் ஆர் சீனிவாசன் தேசிய தலித்துக்கள் ஆணையத்துக்கு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழக் அரசிடம் ஆணையம் இதற்கான விளக்கத்தை கோரி உள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா என்பதை குறித்து விசாரணை நடத்த உள்ளோம். இந்தக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது எனபது நிரூபிக்கப்பட்டால் அரசு உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.