தார், மத்தியப் பிரதேசம்

பிரதமர் மோடி நேரில் வந்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என மத்தியப் பிரதேச கிராமவாசி ஒருவர் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  அதில் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வலியுறுத்துகின்றனர்.   மத்தியப் பிரதேசத்தில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியாவது போட வேண்டும் என மாநில அரசு முனைப்புடன் உள்ளது.

நேற்று முன் தினம் தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இன கிராமமான கிக்கார்வாஸ் என்னும் ஊருக்கு தடுப்பூசி போடும் குழுவினர் சென்றுள்ளனர்.   அந்த கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது ஒரே ஒருவர் மட்டும் தனது மனைவியுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துள்ளார்.    குழுவினர் அவரிடம் யார் வந்தால் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என கேட்டுள்ளனர்.

அந்த கிராம வாசி முதலில் ஒரு முத்த அதிகாரி வந்தால் போட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.  அதையொட்டி குழுவினர் துணை கோட்ட நீதிபதியை வரச் சொல்லலாமா எனக் கேட்டுள்ளனர்.  அதற்கு அவர் துணை கோட்ட நீதிபதியிடம் சொல்லி இங்குப் பிரதமர் மோடியை நேரில் வரச் சொன்னால் தடுப்பூசி போட்டு கொள்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

குழுவினர் அவரிடம் மிகவும் வற்புறுத்தி உள்ளனர்.  ஆனால் அவர் அதைக் கருத்தில் கொள்ளாமல் மோடி நேரில் வந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்வேன் எனப் பிடிவாதம் பிடித்துள்ளார்.   சுகாதாரக் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.  அம்மாவட்ட அதிகாரிகள் அவரை மீண்டும் அணுகி அவரையும் அவர் மனைவியையும்  தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சம்மதிக்க வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.