கோவை: பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தியுடன் கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இணைந்து வாக்கு சேகரித்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றி மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
“இங்கே இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி வருகை தந்திருக்கிறார்! நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, திமுக தோளோடு தோள் நிற்கிறது. திமுக எப்போதும், சோதனைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கும் கூட்டணிக் கட்சி. எப்போதும் வெல்லும் கூட்டணி, நம்முடைய கூட்டணி. அன்னை சோனியா காந்தி, மீதும் சகோதரர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தணியாத அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை, நம்முடைய ஸ்டைலில் வரவேற்க வேண்டும் என்றால் ராகுலே வருக… புதிய இந்தியாவிற்கு விடியல் தருக என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறேன்.
சகோதரர் ராகுலின் நடைப்பயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தேன். மும்பையில் நடந்த நிறைவு கூட்டத்திலும் பங்கெடுத்தேன். “மக்களிடம் செல்! மக்களிடம் இருந்து கற்றுக்கொள்!” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், சகோதரர் ராகுல், தன்னுடைய நடைப்பயணத்தில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். இந்த “தேர்தலின் கதாநாயகன்”காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான். திமுக தொடர்ந்து வலியுறுத்தும் சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது.
இப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நாங்கள் பணியாற்றிக்கொண்டு இருந்தால் தொழில்வளம் மிகுந்த இந்தக் கோவையை கடந்த 10 ஆண்டாக பாஜக எப்படியெல்லாம் நாசமாக்கி இருக்கிறது என்று சொல்லட்டுமா?
பாஜக ஆட்சியில் இரண்டு பெரிய தாக்குதல் நடத்தியது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, ஏழைகளின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பறித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் முதல் தாக்குதல். இதனால் பணப்புழக்கம் குறைந்து, பல தொழில்கள் முடங்கிப் போனது. இரண்டாவது தாக்குதல், ஜி.எஸ்.டி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தக் கோவையில் முதலாளிகளாக இருந்தவர்களை எல்லாம், கடனாளிகளாக மாற்றினார்கள். பலர் தங்களின் கம்பெனிகளை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தால், இங்கு உருவான நூலும்-துணியும் தேங்கிக் கிடக்கிறது. 35 விழுக்காடு மில்களை, மூட வேண்டிய நிலையில் இந்த மேற்கு மண்டலம் இருக்கிறது. இரண்டு முறை கோவைப் பகுதிக்கு வந்து, கொங்குப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமான பகுதி என்று பிரதமர் பேசினாரே. திமுக தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கிறது என்று சொன்னாரே. எப்படிப்பட்ட வடிகட்டிய பொய் இது. இந்தக் கோவை பொதுக்கூட்ட மேடையில் இருந்து, நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனம், 6500 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீட்டை மேற்கொள்வதாக முடிவானது. தமிழ்நாடு அரசும் இதற்கான எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு, அவர்களை மிரட்டி அந்தத் தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றிவிட்டார்கள். இதுதான் கோவைக்கான பாஜகவின் போலிப் பாசம். எதிர்காலத்தில், மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும், செமிகண்டக்டர் தொழில் திட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு மிரட்டி மடைமாற்றியது பாஜக தான்!
எப்படி கூச்சமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்? கோவையில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? கோவை மக்கள் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்? கோவை மக்கள் அமைதியை விரும்பக் கூடிய மக்கள். அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பிரதமர் இங்கு வந்து, இட்லி பிடிக்கும், பொங்கல் பிடிக்கும், தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் போலி முகமூடி மொத்தமாகக் கிழிந்து தொங்கிவிட்டது.
இப்படி “கோவை வேண்டாம்” – “தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு இப்போது தமிழ்நாடு சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி” சொல்லுங்கள், தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால், தமிழ்மொழியைப் புறக்கணித்தால், தமிழ்ப் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்கவேண்டும். பாஜக கூட்டணியையும், பாஜகவின் பி-டீமான அதிமுக கூட்டணியையும் ஒருசேர வீழத்தவேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.