மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே.

இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் ராஜ்ய சபா எம்.பி. யாக உள்ளார்.

“2004 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றபோது சோனியா காந்தி பிரதமராக பொருப்பேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.

ஆனால், எதிர்கட்சிகள் அவரை வெளிநாட்டினராக முன்னிலைப்படுத்தியதால் அது நடக்காமல் போனது.

அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கும் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியும் மக்களவை உறுப்பினருமான சோனியா காந்தி பிரதமராக பதவியேற்க ஏன் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

2004 ம் ஆண்டு மன்மோகன் சிங்-கிற்கு பதில் சரத் பவாரை பிரதமராக தேர்வு செய்திருந்தால் அது நல்ல தீர்வாக அமைந்திருக்கும்” என்று ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராக வரவேண்டும் என்ற மத்திய அமைச்சரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பா.ஜ.க. கூட்டணியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.