இந்திய ஒற்றுமைப் பயணம் நான்கு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் சுமார் 4000 கி.மீ. நிறைவடைந்துள்ளது.
காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து தனது பயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி.
நாளை ஸ்ரீநகரில் நடைபெற இருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் நிலையில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் காஷ்மீரில் திரண்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளருமான செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் வாழப்பாடி இராம. சுகந்தன் மற்றும் தேசிய செயலாளர் மயூரா எஸ். ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் காஷ்மீருக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரைக்கு போதுமான பாதுகாப்பு இல்லாததால் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் நடைப்பயணத்தை பாதியிலேயே நிறுத்த அறிவுறுத்தினர்.
இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா-விடம் காஷ்மீரில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு சீராக உள்ளது அதனால் தான் லால் சவுக் பகுதியில் ராகுல் காந்தியால் இந்திய தேசிய கோடியை ஏற்றமுடிந்தது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக அமித் ஷா கூறுவது உண்மையானால் ஜம்முவில் இருந்து லால் சவுக் வரை அவரால் நடந்து வர முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.