மதுரை: தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம்  என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர்,  தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவினை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் தடுப்புக்காவல் சட்டத்தில் தனது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு போடும் குண்டாஸ் நடவடிக்கைகளில்  86 சதவிகிதம்  ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தவர், கடந்த  2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தான் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுதாரரின் கணவர் ஜெயராமனை விடுவிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாநில அரசு இந்த உத்தரவை கருத்தில் கொண்டு தடுப்பு காவல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும், தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.