சென்னை: கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா தனிமையை மீறினால் ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வீட்டு தனிமையை மீறி வெளியே சுற்றுபவர்கள் குறித்து, 044 – 25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார்.,

சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால், மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதேபோல் காய்ச்சல், சளி போன்ற அறிகுறியுடன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முடிவு வரும் வரை வெளியில் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஆலோசனை பெற பிரத்யேக போன் எண்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. பயிற்சி மருத்துவர்கள் மூலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பலர், அரசின் உத்தரவை மதிக்காமல்,  சாதாரணமாக வெளியில் நடமாடுகிறார்கள். இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று எளிதில் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில், சென்னை பல செக்டார்களாக பிரிக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பெருங்குடி கட்டுப்பாட்டு அறையிலிருந்து பயிற்சி மருத்துவர்கள் மூலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதை முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாள்ர்களை சந்தித்தபோது,  கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, தொற்று பரவலை தடுப்பதற்காக கொரோனா வழிகாட்டுதல்படி தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அவரது குடும்பத்தினரும் வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் முதல்முறை 2 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். 2-வது முறை கொரோனா மையத்தில் அடைக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில்  நடமாடினால் அவர்கள்  குறித்து 044-25384520 என்ற எண்ணிற்கு அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.