டில்லி
அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்கவில்லை என்றால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூடப்போவதாக அந்நிறுவன அதிபர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செல்வந்தர் என்றால் டாட்டாவா இல்லை பிர்லாவா எனக் கேட்பது வழக்கமாகும். அந்த பிர்லா குழுமத்தின் ஐடியா மொபைல் சேவை நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்தது. இதனால் கடந்த வருடம் அந்நிறுவனம் பிரிட்டனின் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் ஐடியா நிறுவனமாக மாறியது. தற்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இது உள்ளது.
ஆயினும் முகேஷ் அம்பானியின் ஜியோ மொபைல் நிறுவனம் கட்டணங்களை வெகுவாக குறைத்ததால் இந்த நிறுவனத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்துக்கு ரூ.1.17 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணமாக 14 வருடத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை குறித்து மத்திய அரசு அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ரூ.1.47 லட்சம் கோடி அபராதம் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.1.17 லட்சம் கோடி அளிக்க வேண்டி உள்ளது. இதையொட்டி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசிடம் சலுகைகள் கோரி மனு அளித்தன.
அந்த மனுவில் தற்போதுள்ள நிலையில் இவ்வளவு தொகை செலுத்த இயலாததால் வட்டி மற்றும் அபராதத்தைத் தள்ளுபடி செய்து விட்டு கட்டணத்தில் பாதியை செலுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் அரசு இதற்குப் பதில் அளிக்காமல் உள்ளது. இது குறித்து வோடபோன் ஐடியா அதிபர் குமாரமங்கலம் பிர்லா இன்று தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர், “இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் கடும் துயரில் ஆழ்ந்துள்ளன. அரசின் கணக்கு தவறு எனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
அதைத் தொடர்ந்து வட்டி மற்றும் அபராதத் தொகையை ரத்து செய்யவும் கட்டணத்தில் பாதியை மட்டும் ஏற்கவும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கேட்ட சலுகை குறித்தும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. அரசு சலுகைகளை அறிவிக்காவிடில் வோடபோன் ஐடியா நிறுவனம் திவாலாகி மூடும் நிலைக்குத் தள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.