தஞ்சாவூர்,

கைதானவர்களை விடுதலை செய்யாவிட்டால் ஆதாரை திருப்பி கொடுப்போம் என்று கதிராமங்கலம் மக்கள் கூறி உள்ளனர்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக  கதிராமங்கலத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  கைதான 10 பேரையும் ஜூலை 7க்குள் விடுவிக்க வலியுறுத்தி கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

கைதானவர்களை விடுதலை செய்யாவிட்டால் ரேஷன், ஆதார் உள்ளிட்டவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த 30-ந் தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கதிராமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் இன்று 5வது நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கைதானவர்கள் அனைவரையும் 7ந்தேதிக்குள் விடுதலை செய்யாவிட்டால், தங்களிடம் உள்ள ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள் கூறி உள்ளனர்.