குவஹாத்தி: சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட என்ஆர்சி இறுதிப் பட்டியலில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுபட்டிருந்தாலும், அவர்களில் வாக்காளர்களாக இருப்பவர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், பட்டியலில் விடுபட்டவர்களுக்கு வாக்குரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் இந்த வழக்குக் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, அவர்களின் வாக்குரிமை பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், அதை எதிர்த்து வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் முறையிட மொத்தம் 120 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் முடிவிலும் அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், அவர்கள் உயர்நீதிமன்றம் செல்லலாம். பின்னர் இறுதியாக உச்சநீதிமன்றமும் செல்லலாம். ஏற்கனவே 100 வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட நிலையில், வரும் வாரங்களில் மேலும் 200 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.