திருவாரூர்:
‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி வைத்து பேசிய மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் கலந்துகொண்டு மக்களோடு உரையாடி வருகிறார்.
அப்போது, பெண் ஒருவர், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்க சற்று நேரம் மவுனம் காத்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.
“தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்” என்ற தலைப்பில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் ஜனவரி 9ந்தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் கூட்டம் திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்துதிருச்சியிலும், தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்று கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். அப்போது, சொக்கம்மாள் என்ற பெண, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவீர்களா என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை எதிர்பார்க்காத ஸ்டாலின் சிறிது நேரம் மவுனம் காத்தார். இது மக்களிடையே வியப்பதை ஏற்படுத்திய நிலையில்… அந்த பெண்ணோ விடாமல், தனது கேள்விக்கு பதில் தெரிவியுங்கள் என்று வலியுறுத்தி வந்தார்.
அதையடுத்து சொக்கம்மாளுக்கு பதில் கூறிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறுவாக தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கும் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் பதில் அளித்தார்.