சென்னை: கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
கொரோனா 2து அலை காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 15,659 பேருக்கு புதியதாக கொரோனா உறுதியானது. அதிகபட்சமாக சென்னையில் 4,206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் கொரோனா நோயாளி வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு: கோவிட் 19 நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் போது அவரின் வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பிட்ட காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல சமயங்களில் வீட்டில் உள்ள நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்று வருகின்றனர் என்பது எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பொதுமக்கள் இதனை மீறும் பட்சத்தில் அந்த நோயாளி கோவிட் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படுவார். மேலும், அவரின் வீட்டில் உள்ள மற்றவர்கள் தனியார் தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஆகவே பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டினை முறையாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.