மும்பை:
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக சுமார் 30ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த 22ந்தேதி நடைபெற்ற வன்முறை, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியும், 50க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து ஆலைக்கு மாவட்ட கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளதாவது,
ஆடு மூடப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் 30 ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும் என்றும் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி இந்தியாவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாமிர உருக்காலையை நம்பியிருந்த சிறு தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், இதன் காரணமாக ஆண்டொன்றுக்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவின் இறக்குமதி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.