கோவை:
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோவை 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது குழந்தைப்போல வேறு எங்கேனும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், நான் அங்கு சென்று போராடுவேன் என்று குழந்தையை இழந்த சிறுமியின் தாயார் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் கோவை பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர்மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி கோவையில் புதிதாகத் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், சந்தோஷ்குமார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவனை குற்றவாளி என்றும், இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதித்து நீதிபதி ராதிகா அதிரடி தீர்ப்பு கூறினார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தாய், வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் விரைவாக கண்டுபிடித்து, அவனுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி தெரிவித்தவர், இது போன்று எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது;. இது போன்று எங்கு பாதிக்கப்பட்டாலும் நான் அங்கு சென்று போராடுவேன் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.