மோடி அரசை யாரும் கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேட்டால் அவர்களுக்கு தேசதுரோகி, பொறுப்பற்றவன் போன்ற பட்டங்கள் சூட்டப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
கறுப்பு பணம் குறித்த விவகாரம் குறித்து பேசும்போது, மத்திய அரசு முக்கியமாக நாட்டின் எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுறுவும் கள்ளநோட்டுகளை முதலில் கவனிக்க வேண்டும். அதுமட்டுமன்றி மோடி அரசு இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுக்களை கைப்பற்றியிருக்கிறது, கறுப்பு பணத்தை தடுக்க இதுவரை என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது போன்ற விபரங்களை வெளியிட வேண்டும். வரும் தேர்தல்களில் பாஜகவினர் பணத்துக்கு பதில் காசோலைகளை பயன்படுத்தினால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று நம்பலாம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் சல்மான் குர்ஷித் ஆம் ஆத்மி கட்சியையும் விமர்ச்சிக்க தவறவில்லை. ஆம் ஆத்மி கட்சியினருக்கு கேள்வி கேட்டால் பிடிக்காது, சீரியசான விஷயங்களுக்கு கூட பொறுப்பற்ற விதத்தில் கமெண்ட் அடிப்பது அக்கட்சி தலைவர்களின் பழக்கம். இது கடந்தகாலங்களில் அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர்கள் குட்டு இப்போது வெளிப்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்தார்.