அமராவதி:
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடிவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமைச்சர்கள் யார் மீதாவது ஊழல் புகார்கள் வந்தால், அவர்கள் உடடினயாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ஆந்திராவில் நடைபெற்ற லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் 30ந்தேதி முதல்வராக பதவி ஏற்றார்.
முதல்வர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக முதியோர் உதவித்தொகையை உயர்த்தி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அனைத்து சாதியினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 5 துணை முதல்வர்கள் உள்பட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றனர். இதையடுத்து, அமராவதி முதலமைச்சர் அலுவலகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதன்முதலில் கையெழுத்துப் போட்ட முதியோர் ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுபோல நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும் உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அப்போது,. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிரடியாக தெரிவித்தார். மேலும் பதவி ஏற்பதற்கு முன்பு கூறப்பட்டதுபோல, புதிய அமைச்சர் களின் பதவி காலம் இரண்டரை ஆண்டுகள் தான். அதன்பிறகு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்பதையும் தெளிவு படுத்தினார்.