கோலாப்பூர், மகாராஷ்டிரா
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை விசாரித்தால் புல்வாமா தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என என் என் எஸ் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வானா மாவட்டத்தில் நடந்த தற்கொலப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிர வாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. உலக தலைவர்கள் பலர் இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகாரஷ்டிரா நவ நிர்மாண் கட்சி தலைவரான ராஜ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார். அப்போது ராஜ் தாக்கரே, “புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி கோர்பட் தேசிய பூங்காவில் நடந்த படப்பிடிப்பில் மும்முரமாக கலந்துக் கொண்டுள்ளார். இந்த தாக்குதல் தகவல் வெளி வந்தும் அவர் படப்பிடிப்பை தொடர்ந்துள்ளார்.
இந்த தாக்குதலில் மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் அரசியல் பலி ஆக்கப்பட்டுள்ளனர். இது போல நிகழ்வுகள் மோடி அரசில் தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தாக்குதல் குறித்த உண்மைகள் வெளி வரும்.” என தெரிவித்துள்ளார்.
ராஜ் தாக்கரேவின் இந்த தகவல் நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. புல்வாமா தாக்குதல் குறித்தும் அப்போது மோடி படப்பிடிப்பை நிறுத்தாமல் தொடர்ந்ததற்கும் ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி, “ராஜ் தாக்கரே ஒரு பலகுரல் (மிமிக்ரி) கலைஞர். அதில் புகழ் பெற்றவர். தற்போது அவர் ராகுல் காந்தி கூறுவது போல் பேசி தோவல் மீது குற்றம் சாட்டி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.