கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார்.

நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.
கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்”
அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.
விவசாயிகளுக்கு 2,428 கோடி வறட்சி நிதி கொடுத்த ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி தான்
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில், தொடங்கி உள்ளார். முன்னதாக கோவை வந்த பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடத்த, கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி வழிபாடு செய்துவிட்டு, அதிமுக பாஜக தலைவர்களுடன் இணைந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அருகே உள்ள பின்னர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இதை கவனமாக கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது,

நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய், கறிகளுக்கு உரிய விலை கிடைக்க செய்தோம். இங்கே விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம் என்று கூறியதுடன், விவசாயிகள் இரட்டிப்பு லாபம் ஏற்படும் அளவிற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தோம் என்றவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது, இந்த பகுதியில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க அந்த ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றை எல்லாம் விவசாயிகள் சென்று பார்க்க வேண்டும் என்றார்.
அதேபோன்று விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். வண்டல் மண் 40 யூனிட் வரை இலவசம் என்று கூறினோம் ஆனால், திமுக அரசு அதை மாற்றிவிட்டது.
விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 14,000 ஏரிகளில் 6290 ஏரி குளங்களை கொடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரி நடவடிக்கை எடுத்தோம். வண்டல் மண்களை விவசாயிகளை எடுத்து இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்த குறிப்பிட்ட அடி கிடைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கோடை காலத்தில் நிலத்தடி நீர் சேர்க்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தினார்கள்.
அதேபோன்று உள்ளாட்சி துறை மூலம் 26,000 பேர் குளங்கள் தூர்வாரினோம். ஆனால் அதன் பிறகு திமுக ஆட்சியில் அவை கிடப்பில் போடப்பட்டது. நான் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த போது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மூலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது. விவசாயிகளின் 50 வருட கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அணையில் இருந்து தண்ணீரை தேக்கி வைத்து எடுக்க வேண்டும் என்பதால் அந்த திட்டத்திற்கு முதலில் 15 வருடம் ஆகும் என்று கூறினார்கள். எனவே அதற்கு மாற்று திட்டம் தயார் செய்தோம். அதிகாரிகள் பலமுறை ஓய்வு பெற்று விடுவார்கள் என்பதால் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூலம் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. அன்னூர் உள்ளிட்ட விவசாயிகள் தங்களுக்கும் அந்த தண்ணீர் வேண்டுமென்று கூறினார்கள். எனவே அத்திக்கடவு அவிநாசி திட்டம் இரண்டாவது கட்டத்தை நிறைவேற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
அதேபோன்று வனவிலங்குகள் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நான் முதலமைச்சராக இருந்த போது அகழிகள் ஏற்படுத்தப்பட்டது. காட்டு விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்தோம், காப்பீட்டு திட்டம் மூலம் உதவி செய்தோம். விவசாயிகளுக்கு 2,428 கோடி வறட்சி நிதி கொடுத்த ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி தான்.
நதிநீர் மாசுபடுவதை தடுக்க பவானிசாகர் அமராவதி நொய்யல் 4 ஆறுகள் நேரில் மாசு கலக்காமல் தடுக்கவும் அதை சுத்தம் செய்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியின்போது, பிரதமரிடம் இது தொடர்பாக பேசி நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினோம். அது ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது இப்போது அந்த திட்டத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். இது அதிமுக ஆட்சியின் சாதனை. அதேபோன்று கடலில் கலக்கும் தண்ணீரை வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறோம்.
அதேபோன்று செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தொழில் நலிவு அடைந்து விட்டது என்று கூறினார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் அவர்கள் கோரிக்கை அனைத்தும் பரிசளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் நான்கு முறை மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். அதிமுக ஆட்சியில் தோழாளர்களுக்கு பசுமை வீடு திட்டம் கொண்டு வந்து பத்தாயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டது.
கைத்தறி துணி விற்காத போது அதற்கு 150 கோடி மானியம் கொடுத்தோம்.
கேரளாவில் இருந்து தண்ணீர் கிடைக்க கேரளா முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம்.
விவசாயிகளுக்கு ஏரி, குளங்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, உள்ளாட்சித் துறை மூலமும் தூர்வாரப்பட்டது. இந்த ஆட்சியில் தூர்வாரும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியான பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசுக்கு அனுப்பிய அத்திகடவு-அவிநாசி திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு பின்பு மாற்று திட்டமாக அத்திகடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு பாசனம் பெறும் அளவில் அத்திகடவு-அவிநாசி திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தப்படும்.
அத்திகடவு-அவிநாசி பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும். அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும். தொட்டிப் பாலம், டனல் போன்றவை அமைக்க வேண்டும், வனத் துறை அனுமதி வேண்டும், மத்திய அரசு அனுமதி வேண்டும், இப்படி பல பிரச்னைகள் இருந்தன. ஆனால் எப்படியாவது விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் சிறப்புக் குழு அமைத்து அத்திகடவு-அவிநாசி திட்டம் மாற்று திட்டமாக செயல்படுத்தப்பட்டது.
நான் விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றேன், அதனாலதான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதியை அதிமுக ஆட்சியில் பெற்றுக்கொடுத்தோம்.
கால்நடை துறைக்காக அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் பூட்டிகிடக்கின்றது, இது போன்ற பல திட்டங்கள் முடங்கி இருக்கின்றன. வனத்துறைக்கு அருகில் இருக்கும் பயிர்கள் வனவிலங்குளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது.
எங்களிடம் நிறைய திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது. செங்கல் சூளை தொடர்பான கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன், ஆனால் திமுக ஆட்சியில் 4 முறை கட்டண உயர்வால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் பரசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சுத்தமான நீர் கிடைக்கப்பெற வேண்டும். நதிகளைப் பாதுகாக்க 11 ஆயிரம் கோடி நிதி கிடைத்து உள்ளது, இது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் காரணம். விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் என்றவர் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.