டில்லி

லாய் லாமாவாக ஒரு பெண் தேர்வு செய்யப் பட்டால் அவர் அழகானவராக இருக்க வேண்டும் என தற்போதைய தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

திபேத்திய புத்த மதத்தினருக்கு தலைவராக தலாய் லாமா உள்ளார். தற்போது உள்ளவர் 14 ஆம் தலாய் லாமா ஆவார். கடந்த 1959 ஆம் ஆண்டு திபெத்தில் நடந்த சுதந்திர போரை ஒட்டி சீன அரசு இவர் மீது குற்றசாட்டுக்கள் பிறப்பித்து இவரை கைது செய்ய உத்தரவிட்டது. அங்கிருந்து வெளியேறிய தலாய் லாமா தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக புத்த மதத்தினர் 15 ஆம் தலாய் லாமாவை தேர்ந்தெடுக்க உள்ளனர். அடுத்ததாக ஒரு பெண் தலைவரை நியமிப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து செய்தி ஊடகமான பிபிசி தலாய் லாமாவிடம் கருத்து கேட்டுள்ளது.

தலாய் லாமா, “அடுத்து பெண் தலாய்லாமா தேர்வு செய்யப் பட்டால் அவர் ஒரு அழகியாக இருக்க வேண்டும். அது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவர் அழகாக இருந்தால் மட்டுமே மக்கள் அவர் முகத்தைக் காண விரும்புவார்கள்” என தெரிவித்துள்ளார். புத்த மத துறவியான தலாய் லாமாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.