சென்னையின் பழமைமிகு அடையாளங்களில் ஒன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை மற்றும் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ‘அடையார் கேட்’ ஹோட்டல்.
1970 ம் ஆண்டில் 5 நட்சத்திர அந்தஸ்துடன் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் பின்னர் ஐ.டி.சி. குழுமத்தின் கட்டுப்பாட்டில் ‘பார்க் ஷெரட்டன்’ என்ற பெயரில் இயங்கிவந்தது.
கோயல் குடும்பத்தினரின் அடையார் கேட் ஹோட்டல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹோட்டல் தற்போது ‘கிரௌன் பிளாசா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
அடையார் கேட் தவிர ஊட்டியில் உள்ள பார்ச்சூன் சல்லிவன் மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள இன்டர்கான்டினென்டல் சென்னை ரிசார்ட் ஆகிய ஹோட்டல்-களையும் தங்கள் வசம் வைத்துள்ள இந்த நிறுவனம் டி.டி.கே. சாலையில் 286 அறைகளுடன் செயல்பட்டுவரும் ‘கிரௌன் பிளாசா’ ஹோட்டலை ஸீப்ராஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளது.
அண்ணாசாலை மற்றும் ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரும் ‘ரெயின் ட்ரீ’ என்ற நட்சத்திர ஹோட்டலை நடத்திவரும் ஸீப்ராஸ் நிறுவனம் அடையார் கேட் ஹோட்டலை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது.
ஏற்கனவே சென்னையின் அடையாளமாக இருந்த எழும்பூர் மாண்டியத் சாலையில் இருந்த அட்லாண்டிக் ஹோட்டலை 165 கோடி ரூபாய்க்கு வாங்கி குடியிருப்பாக மாற்றிய ஸீப்ராஸ் நிறுவனம், எம்.ஆர்.சி. நகரில் கட்டப்பட்டு வந்த வைசிராய் ஹோட்டலையும் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியுள்ளது.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் சதுர அடி விலை ரூ. 30,000 வரை விற்பனையாகும் போட் கிளப் பகுதியின் அருகில் இருக்கும் இந்த அடையார் கேட் இடத்தையும் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றுவதன் மூலம் குறைந்த பட்சம் சதுர அடி ஒன்றுக்கு ரூ. 25,000 கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
2014 ம் ஆண்டு எம்.ஆர்.சி. நகரில் 480 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தற்போது மறுவிற்பனை செய்பவர்கள் கூட சதுர அடி ரூ. 20,000 க்கு குறைவாக விற்பதில்லை என்று கூறப்படும் நிலையில் அடையார் கேட் அடுக்குமாடி குடியிருப்பின் விலை கூடுதலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து சுற்றுலா துறை சவாலை சந்தித்து வருவதும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும் முக்கிய நகரங்கள் தங்கள் பழமைமிகு அடையாளங்களை இழந்து வரும் நிலையில் சென்னையில் உள்ள அடையார் கேட் ஹோட்டல் விரைவில் அடுக்குமாடி குடியிருப்பாக மாற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.