சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அக்டோபர் 5ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது. நாளை (8ந்தேதி) முதல் போட்டி, இந்தியா, ஆஸ்திரேலியா இடையே போட்டி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 13ந்தேதி, 18ந்தேதி, 23ந்தேதி, 27ந்தேதிகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . அதன்படி நாளை (அக்டோபர் 8ந்தேதி) சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 8, அக்டோபர் 13, அக்டோபர் 18, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 27 ஆகிய ஐந்து நாட்களிலும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனமும் கூடுதலாக ரயில்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.