பிரிஸ்டல்: 

லக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது ஆட்டம்  ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும், குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையே நடைப்பெற்றது.

இதில்,  ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 208 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஜஜாய் மற்றும் முகமது ஷாசத் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் களமிறங்கிய ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி 34 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.  நிதானமாக ஆடி வந்த ரமத் ஷா 4 (60) ரன்களில் வெளியேற தொடர்ந்து ஆடியமுகமது நபி 7(22) ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஜட்ரன் மற்றும் குல்படின் நைப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.  குல்படின் நைப் 31(33) ரன்களில் அவுட்டாக, தனது அரைசதத்தினை பதிவு செய்த நஜிபுல்லா ஜட்ரன் அதே ஓவரில் 51(49) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

தவ்லத் ஜட்ரன் 4(6) ரன்னில் அவுட்டாக, சிறிது அதிரடியாக ஆடிய ரஷித் கான் 27(11) ரன்களிலும், முஜீப் ரகுமான் 13(9) ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில் 38.2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்களும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.

இதையடுத்து  208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கம் முதலே சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஜோடி தனது அரை சதத்தினை பூர்த்தி செய்த நிலையில்,  ஆரோன் பிஞ்ச் 66(49) ரன்களில் கேட்ச் ஆகி வெளி யேறினார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 15(20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர், ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றிபெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டிவன் ஸ்மித் 18(27) ரன்களில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் டேவிட் வார்னர் 89(114) ரன்களும், மேக்ஸ்வெல் 4(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் ஆஸ்திரேலியா அணி 34.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்படின் நைப், ரஷித் கான், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.