துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், இந்தியக் கேப்டன் விராத் கோலி 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம், 900 புள்ளிகள் பெற்ற ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேசமயம், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் 866 புள்ளிகளுடன் கோலியை நெருங்கியுள்ளார். பிரிஸ்பேன் போட்டியில் அவர் அரைசதம் அடித்தாலே கோலி 4வது இடத்திற்குப் போய்விடுவார்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிவிட்ட விராத் கோலி பெற்றிருப்பது 870 புள்ளிகள்.
தற்காலிக கேப்டன் ரஹானே, 6வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளார். புஜாரா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில், 428 புள்ளிகள் பெற்ற ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.